இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் மோசடிகள்

நடப்பு ஆண்டில் 71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடி நடைபெற்று உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் அறிக்கையில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் வங்கி மோசடி 15 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோசடியால் பறிபோன பணத்தின் அளவு 73.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017 2018 ஆம் ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக 5 ஆயிரத்து தொள்ளாயிரத்து 16 வழக்குகள் பதிவானது என்றும் மொத்தம் 41,167 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாகவும், ஆனால் நடப்பு ஆண்டில் 6,801 வழக்குகள் பதிவாகி 71,542 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிக அதிக அளவில் கடன் கொடுக்கும் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதையடுத்து தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மோசடி நடைபெற்று உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டில் அரசு வங்கிகளில் 64 ஆயிரத்து 509 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்று 3 ஆயிரத்து 766 வழக்குகள் பதிவாகி உள்ளது என்றும் கடந்த ஆண்டில் 38 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மோசடி நடைபெற்று 2 ஆயிரத்து 885 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் மோசடி நடைபெற்று சராசரியாக 22 மாதங்களில் அது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடி மூலம் 52 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வங்கிகள் இழந்து உள்ளதும் இதுகுறித்து சராசரியாக 55 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி அட்டைகள் இணையதளம் மூலமாக புள்ளி 3 சதவிகிதம் அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கி மோசடிகளை தடுக்க அனைத்து துறைகள் உடனும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே