நாடு முழுமைக்கும் ஒரே மொழி என இந்தி தான் என அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சி இது எனவும் மு.க.ஸ்டாலின் குறை கூறியுள்ளார். அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா கேட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டும். அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் என்றும் திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்தக் கருத்தை அமித்ஷா திரும்பப் பெறுவதோடு, பிரதமர் மோடி இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், தி.மு.க. இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.க. தயங்காது என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் என்றும், இந்த நாடு இந்தியா, “இந்தி”யா அல்ல என எச்சரிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.