தன்னைப் பொறுத்தவரை ஹேக்கதானில் பங்கேற்றவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்றார் பிரதமர் மோடி.
முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கடின முயற்சியில் ஈடுபடுபவர்களை வெற்றியாளர்கள் என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் உணவுகளான இட்லி, சாம்பார், வடை பற்றி பிரதமர் மோடி சுவையான கருத்துகளை வெளியிட்டார்.
சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை ஆகிய உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை என்று மோடி கூறினார்.
சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது என்று கூறிய அவர் மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம் என்றும் புகழாரம் சூட்டினார்.
தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது என்று கூறிய மோடி, சிங்கப்பூரை போல, பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.