இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதல்வர் பழனிசாமி

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் முதல்வர் முன்னிலையில் சுகாதாரத்துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. லண்டன் பயணத்தின் கடைசியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார்.

அந்த பூங்காவில் உலகில் பல்வேறு நாடுகளில் வளரும் தாவரங்கள் அந்தந்த நாட்டுத் சீதோஷ்ண நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் சூழல், பாலைவனம், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளரும் தாவரங்களில் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், அதை வேளாண் ஆராய்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதை அடுத்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், அமெரிக்க தொழில் முனைவோறையும் சந்திக்கிறார். மேலும் அமெரிக்கவாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத் தரம் வாய்ந்த கால்நடை பூங்காவுக்கு தேவைப்படும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக பஃப்பெல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை முதல்வர் பார்வையிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே