ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் தொழிலாளர் சட்ட விதிகளை சீனா மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இன்று தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில், சீனாவின் தொழிலாளர் சட்ட நடைமுறைக் கண்காணிப்பு ஆணையம், ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்யும் அந்நிறுவனத்தின் உற்பத்திக் கூட்டாளியான ஃபாக்ஸ்கானின் ஸெங்ஸெங் பிரிவு, விதி மீறல்களில் ஈடுபட்டதைக் கண்டறிந்துள்ளது.
சீன தொழிலாளர் சட்டப்படி மொத்த தொழிலாளர்களில் தற்காலிக தொழிலாளர்கள் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் போன்ற நீண்ட பள்ளி விடுமுறைக் காலங்களில் ஃபாக்ஸ்கான் ஸெங்ஸெள ஆலையில் ஐபோன் உற்பத்தியில் பள்ளிச் சிறார்களை பயிற்சியாளர்கள் என்ற பெயரில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களை ஓவர் டைம், இரவுப் பணி பார்க்கவைத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
மொத்தம் 50 சதவீதத்துக்கும் மேல் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு ஆப்பிள் போன்களைத் தயாரித்தது கண்டறியப்பட்ட நிலையில், தற்காலிக பணியாளரின் விகிதம் அதிகரித்திருப்பது தங்கள் நிறுவன விதிகளை மீறிய செயல் என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிகப் பணியாளர்களை பணியமர்த்தும் போது, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, காப்பீடு உள்ளிட்டவை கிடைக்காமல் போகும்.
இதுபோன்ற விதிமீறல்களில் ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் ஆலை சிக்கியுள்ளது. இதனிடையே, பணியாளர்கள் தாங்களாகவே அதிக நேரம் பணியாற்றுவதாகவும், ஆலையின் கட்டாயத்தின் பேரில் அல்ல என்றும் ஃபாக்ஸ்கான் பதிலளித்தது குறித்தும் அந்த ஆணையம் விசாரணை நடத்துகிறது.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரிடையே ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தப் பிரச்சனை மேலும் தொழில்ரீதியான அழுத்தம் தருவது குறிப்பிடத்தக்கது.