அமெரிக்க அதிபர் டிரம்பை முறைத்தபடி கோபத்துடன் நின்ற சிறுமி

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற 16 வயதான இளம்பெண் கிரெட்டா தன்பெர்க், அமெரிக்க அதிபர் டிரம்பை முறைத்தபடி நிற்கும் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக தலைவர்கள் கூடி விவாதிக்கும் பருவநிலை சார்ந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஸ்வீடன் சுற்றுசூழல் ஆர்வலரான 16 வயது கிரெட்டா தன்பெர்க் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் படகில் பயணம் செய்து நியூயார்க் சென்றிருந்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய சிறுமி தன்பெர்க், பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்காத உலக தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து “என்ன தைரியம் உங்களுக்கு” என கூறி ஆக்ரோஷத்துடன் பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்கூட்டம் முடிந்து மத சுதந்திரம் தொடர்பான கூட்டத்தில், அதிபர் டிரம்ப் பங்கேற்க புறப்பட்ட போது, அவரை வழியில் எதிர்கொண்ட தன்பெர்க் அதிபர் டிரம்பை முறைத்தபடி, கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.

இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே சிறுமியின் ஆக்ரோஷ பேச்சு குறித்து கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த டிரம்ப், “சிறுமியை பார்க்க மகிழ்ச்சியான இளம்பெண் போல் தெரிவதாகவும், அவர் மிகவும் பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை நோக்கிக்கொண்டிருப்பதாகவும்” கேலி செய்யும் தொணியில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்ட வலைதளவாசிகள் பலர், பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் 16 வயது பெண்ணை கிண்டலடித்து அமெரிக்க அதிபர் பதிவிடுவது அருவருப்பாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே