அண்ணா சாலை ரிட்டர்ன்..! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

8 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அண்ணா சாலை மீண்டும் முழுவதுமாக இருவழிப்பாதையானது. இதன் நிறை குறைகளை அறியும் பொருட்டு, 2 நாள் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியுள்ளது. 

வண்ணாரப்பேட்டையையும், விமான நிலையத்தையும் இணைக்கும் மெட்ரோ ரயில் பணிகள் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏஜி டிஎம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பணிகள் காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. 

எல்ஐசி மற்றும் ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்ல வேண்டுமெனில் ஜிபி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு மற்றும் ஒயிட்ஸ் சாலை வழியாக 2 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று அண்ணா சாலையை அடையும் வண்ணம் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அண்ணா சாலையில் நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றதால், அந்தச் சாலை மீண்டும் பழையபடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி, அண்ணாசாலையில் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

ஜி.பி. சாலையில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதற்கு மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது. ஒயிட்ஸ் சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது .

ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் சாலையில் அனுமதிக்கப்படுகின்றன.

ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலையை இணைக்கும் ஸ்மித் சாலை முன்பு இருந்ததைப் போன்று ஒருவழிப் பாதையாகவே இருக்கும். அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலது புறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி. சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையைச் சென்றடையலாம். 

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை அடைந்து ஒயிட்ஸ் சாலை மற்றும் ஜி.பி. சாலை வழியாகச் செல்லலாம். பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் சாலை மற்றும் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்ல வேண்டுமானால், அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் யூ டர்ன் மற்றும் ரைட் டர்ன் செய்து அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலையை அடையலாம்.

ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.கா சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் திரையரங்கம், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.

இருவழிப் பாதையாக மாற்றப்பட்ட சாலையில் இன்றும், நாளையும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதை சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் தொடங்கி வைத்தார்.

மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அண்ணா சாலையில் நாளொன்றுக்கு 52 வழித்தடங்களில் 256 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தற்போது அந்தச் சாலை இருவழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், பிராட்வே, அயனாவரம், திருவான்மியூர், வில்லிவாக்கம், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஊனமாஞ்சேரி, தியாகராயநகர், கே.கே.நகர், ஐயப்பன் தாங்கல், சைதாப்பேட்டை, கீழ்கட்டளை, நங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய இடங்களுக்கு இரு வழிப்பாதைகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே