‘சுல்தான்’ படத்தில் இணைந்த யுவன்

சுல்தான்’ படத்தின் பின்னணி இசைப் பணிகளை முழுமையாக யுவன் மேற்கொண்டுள்ளார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, நெப்போலியன், லால், ராஷ்மிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியான படங்களை விட, பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக விவேக் – மெர்வின் பணிபுரிந்து வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அந்தக் கூட்டணி இசையில் வெளியான பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று (மார்ச் 24) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இதில் ட்ரெய்லரில் வரும் காட்சிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்தபோது, படத்துக்கும் முழுமையாக யுவன்தான் பின்னணி இசைப் பணிகளைக் கவனிக்கவுள்ளார். ஏனென்றால் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்பதால், பின்னணி இசையை யுவன் செய்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்துள்ளது படக்குழு.

ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே