யானைகவுனி மூவர் கொலை சம்பவம் : புனேவில் 3 பேர் பிடிபட்டது எப்படி?

யானைகவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை 4 மாநிலங்களின் போலீஸார் உதவியுடன் சோலாப்பூர் அருகே காரில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தோம் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை யானைகவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்த தலில் சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோர் புதன் அன்று மாலை தலையில் சுடப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீட்டின் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தனர்.

அவர்களது மகள் பிங்கி (35) வீட்டுக்குச் சென்றபோது மூவரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். 

பின்னர் விசாரணையில் இறங்கிய போலீஸாருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

மூவரையும் கொலை செய்தது அவர்கள் வீட்டு மருமகள் ஜெயமாலாவும், அவரது உறவினர்களும் என்ற தகவல் கிடைத்தது.

இந்தக் கொலையில் மருமகள் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் சோலாப்பூர் அருகே மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘யானைகவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை சம்பந்தமாக சென்னை சிட்டி போலீஸ் அனைத்து அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் டெக்னிக்கல் டீம், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினோம்.

இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று காலை 6.30 மணி அளவில் 3 குற்றவாளிகளை சோலாப்பூர் அருகே கைது செய்தோம்.

ஷீத்தல் மீதான கொலை மிரட்டல் தொடர்பாக ஏற்கெனவே புகார் இருந்த நிலையில், போலீஸ் விசாரணை நடந்தது.

குற்றவாளிகளைப் பிடிக்க ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் 5 பேர் விமானம் மூலம் புனே சென்றனர்.

அங்கு புனே போலீஸுடன் இணைந்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் சோலாப்பூர் அருகே இருப்பது தெரிந்தது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்தனர்.

புனேவில் போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த குற்றவாளிகள் சோலாப்பூர் நோக்கி காரைத் திருப்பிச் சென்றனர்.

அவர்களது கார் எண் உள்ளிட்ட விவரம் எங்களிடம் இருந்ததால் அவர்கள் எங்குள்ளனர் என்று எங்களால் அறிய முடிந்தது. சோலாப்பூர் அருகே அவர்கள் சென்ற வாகனத்தை போலீஸார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

அந்த வாகனத்தில் இருந்த 3 குற்றவாளிகளான ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், ரவீந்திரநாத், உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொலையாளிகள் பயன்படுத்திய 532 ரகத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில போலீஸார் இணைந்து பணியாற்றினர். அனைத்து மாநில போலீஸாரும் சிறப்பாக ஒத்துழைத்தனர்.

இரவு அவர்கள் கொலை செய்த பின்னர் காரில் தப்பியது குறித்து ஆந்திர போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்.

அவர்கள் குற்றவாளிகள் காரில் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தினர். ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷும், அவரது நண்பர்களும் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திய பின்னரே யார் சுட்டது, யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும்.

இதில் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் குடும்ப நண்பர்கள் 3 பேர் உள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை அவர்கள் வரும்போது கொண்டு வந்துள்ளனர். 5 ரவுண்ட் அவர்கள் சுட்டுள்ளனர். இதில் ஆறாவது ரவுண்ட் ஸ்ட்ரக் ஆகியுள்ளது.

இதற்கு முன்னர் ஷீத்தல் அளித்த புகாரில் மகாராஷ்டிராவிலிருந்து இதேபோன்று வந்து மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி, அவர்கள் வந்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தோம்.

லாக்கர் ஒன்றை அவர்கள் எடுத்துச் சென்றதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரிக்கிறோம். மீதம் உள்ள குற்றவாளிகள் குறித்த தகவலை வெளியிட முடியாது.

பிடித்தபின்னர் சொல்கிறோம். இது திட்டமிட்டு நடந்த கொலை. கொலை செய்யத் திட்டம் தீட்டி, முடிவெடுத்து வந்துள்ளனர். அதனால்தான் துப்பாக்கியுடன் வந்துள்ளனர்.

இது திருமணத் தகராறு. அங்கு ஏற்கெனவே பல பஞ்சாயத்துகள் நடந்துள்ளன. சிசிடிவியில் பல தகவல்கள் கிடைத்தன. யார் யார் வந்தனர். வந்த வாகன எண் உள்ளிட்டவை சிக்கியுள்ளன’.

இவ்வாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே