தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா வருவது ஏன்? மருத்துவர் விளக்கம்

கொரோனா தடுப்பு ஊசியில் கொரோனா வைரஸ் வலுவிழந்த வடிவத்தில்தான் உடலில் செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதில் இன்னமும் பலருக்கு தயக்கங்களும் சந்தேகங்களும் உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கொரோனா தொற்று ஏற்படுவதை தற்போது காண முடிகிறது.

கொரோனா தடுப்பு ஊசி உடலில் செலுத்தப்பட்ட பிறகு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும். இந்தியாவில் வழங்கப்படும் 2 தடுப்பூசிகளையும் 2 டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதாவது முதல் டோஸ் எடுத்துக் கொண்டதில் இருந்து 42 நாட்கள் கழித்துதான் உடலில் தடுப்பு மருந்து முழுவதுமாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில், தடுப்பூசி போடாத நபருக்கு தொற்று ஏற்பட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அதே வாய்ப்பு தடுப்பூசி போட்ட நபருக்கும் இருக்கிறது. சரியாக முககவசம் அணியாததால் சமூக இடைவெளி பின்பற்றாததால் கை கழுவாததால் இந்த தொற்று ஏற்படுகிறது. கொரோனா தடுப்பு ஊசியில் கொரோனா வைரஸ் வலுவிழந்த வடிவத்தில்தான் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் வைரஸால் தொற்று ஏற்படுத்த முடியாது. எனவே தடுப்பூசி செலுத்துவதால் கொரோனா தொற்று ஏற்படுவது இல்லை “என்று மருத்துவர் ஸ்பூர்த்தி விளக்குகிறார்.

சிறிய தனியார் மருத்துவமனைகளில், அல்லது குறுகிய இடம் கொண்ட அரசு தடுப்பூசி செலுத்தும் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக, கொரோனா தடுப்பூசி மையங்களே தொற்று பரவலுக்கான மையமாகி விடுகிறது. எனவே தோளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு முகத்தில் இருக்கும் முக கவசத்தை கழட்டி செல்ஃபி அல்லது புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்.

தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா வந்தால், முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு லேசான பாதிப்பும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு அதை விட லேசான பாதிப்பும் ஏற்படுவதை காண்கிறோம் எனவும் அவர் கூறுகிறார்.

தடுப்பூசி போட்டால் கொரோனா வரவே வராது என எந்த ஆய்வும் உலக அளவில் கூறவில்லை. ஆனால் தடுப்பூசி போட்டு கொரோனா வந்தால் அது லேசான சளி காய்ச்சல் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் முக கவசம் அணிவதும் அவசியமாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே