மதுக்கடைகள் திறந்ததை ரஜினியால் வெளிப்படையாக கண்டிக்க இயலவில்லையே ஏன்? – தொல்.திருமாவளவன் கேள்வி

மதுக்கடைகளை திறப்பது குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, ‘பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்’ இருக்க வேண்டும் என்பதைப் போல உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன.

தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்குகளில், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கவும் உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது.

இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை இல்லாததால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உடனடியாக ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது சாத்தியமில்லை என்றும், அதற்கான சட்டவிதிகளும் தமிழகத்தில் இல்லை என்பதால் ஆன்லைன் விற்பனை தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கபடுவதற்கு முன், தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி, பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மகாலட்சுமி மற்றும் மகளிர் ஆணையம் அமைப்பின் லட்சுமி மணியரசன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், “அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்றும் கஜானாவை நிரப்ப நல்வழிகளை பாருங்கள் என்று கூறினார்.

ரஜினியின் இந்தக் கருத்து குறித்த தனது பார்வையை முன்வைத்திருக்கும் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், “நடிகர் ரஜினிகாந்த் மதுக்கடைகள் திறப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவரது கருத்து ‘பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்’ இருக்க வேண்டும் என்பதைப் போல உள்ளது.

அதிமுக அரசைக் கண்டிக்க விரும்புகிறாரா, அல்லது நட்பை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறாரா என சந்தேகிக்கப்படும் வகையில் அவரது கருத்து அமைந்திருக்கிறது.

மதுக்கடைகளை திறக்கக்கூடாது. அது மக்களுக்கு எதிரானது. மக்களுக்குச் செய்கிற துரோகம். மதுக்கடைகளை மூட வேண்டும்.

முழு அடைப்பு நீடிக்கும் வரையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற ஆணை வரவேற்கத்தகுந்தது என்று அவரால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல இயலவில்லை” என்று கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1071 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே