யாருடைய கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை : நிர்மலா பதிலடி

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராக்கடன் பட்டியல் குறித்து, மக்களை வெட்கக்கேடான முறையில் தவறாக வழிநடத்த ராகுலும், காங்கிரசும் முயற்சிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும் ஆர்.பி.ஐ மூலம் தகவல் பெற்றிருந்தார்.

இப்பட்டியலில் மெகுல் சோக்சி நிறுவனம், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், விஜய் மல்லையா நிறுவனம், நிரவ் மோடி நிறுவனம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.

இவர்களது ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இத்தகவலை பாராளுமன்றத்தில் வெளியிட தயங்கியது ஏன்? அந்த பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாஜ.,வின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பார்லி.,யில் இதனால்தான் இவ்விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது என ராகுல் டுவிட்டரில் குற்றம்சாட்டி இருந்தார்.

ராகுலின் குற்றச்சாட்டிற்கு வரிசையாக 13 டுவீட்கள் மூலம் பதிலடி தந்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: இன்றைக்கு காங்கிரஸ் வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் பற்றி தவறாக வழிநடத்துகிறது.

2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட நிதி ஆண்டில் (காங்., ஆட்சி) வணிக வங்கிகள் ரூ.1,45,226 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

இது பற்றி மன்மோகன் சிங்கிடம், ராகுல் ஆலோசித்து தெரிந்துகொள்ளட்டும்.

இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான். அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும்.

கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ரகுராம் ராஜன் கூறியதை இங்கு நினைவுப்படுத்துகிறேன்.

‘வாராக்கடன்களில் பெரிய அளவு 2006-08ல் உருவானதே. புரோமோட்டர்களுக்கு அதிக கடன்கள் அளிக்கப்பட்டது.

இவர்கள் ஏற்கெனவே கடனைத் திருப்பி அளிக்காமல் ஏமாற்றியவர்கள், தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அளிக்காத போதும் பொதுத்துறை வங்கிகள் அளித்து வந்தன.

தரமான கடன் அளிப்பு முறைகள் தேவை,’ என ரகுராம் ராஜன் 2018-ல் கூறியுள்ளார்.

வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

9,967 கடன் மீட்பு வழக்குகள், 3,515 எப்.ஐ.ஆர்.,கள் பதியப்பட்டுள்ளன.

நிரவ் மோடி வழக்கில், ரூ.2,387 கோடி அசையும், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் இங்கிலாந்தில் சிறையில் உள்ளார்.

மெகுல் சோக்சி வழக்கில் ரூ.1,936.95 கோடி சொத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. ரூ.597.75 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்டிகுவா நாட்டிலுள்ள அவரை ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா வழக்கில், அவரது ரூ.8,040 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன.

ரூ.1,693 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை ஒப்படைக்கக் கோரி இங்கிலாந்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

மூன்று பேரிடம் இருந்து ரூ.18,332.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும் போதும் சரி, ஊழலை தடுக்க ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என ராகுல் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே