சசிகலா விடுதலை எப்போது?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

“சிறைத்துறையினர், எனது நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

உத்தரவு எனக்கு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படியாக ‘கியூரேட்டிவ்’ மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்தவழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்.

தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியை படித்து பார்த்தேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓர் இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

அந்த இணையதள செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள, சமீபத்தில் ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், “அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், நீங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். உங்களை எல்லோரும் ரொம்ப புண்படுத்திவிட்டார்கள். இனிமேல் வருகின்ற காலமாவது நீங்கள் நிம்மதியா இருக்க வேண்டும்” என என்னிடம் சொன்னதாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை. ஜெய் ஆனந்த் என்னை சந்திக்கவே இல்லை என்றும் சசிகலா அக்கடிதத்தில் கூறியுள்ளார் என்கிறது அந்த செய்தி.

News Source : BBC Tamil

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே