லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவற்றை காண்போம்.
உள்கட்டமைப்பு மேம்பாடு:-
இந்திய-சீன எல்லைகள் முழுமையாக வரையறுக்கப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக எல்லையில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது உள்ள ஆட்சியில் உள்ள அரசு எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக எல்லையோரம் உள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள் அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. எல்லையில் இந்தியா கட்டமைப்புகளை அதிகரிப்பதை சீனா அச்சுறுத்தலாகவே கருதி வந்தது. இது குறித்து பல முறை தனது அதிருப்தியை சீனா இந்தியாவிடம் தெரிவித்திருந்தது.
சிறப்பு சட்டம் 370 நீக்கம்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சட்டமான 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜம்மு- காஷ்மீர், லாடாக் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் என பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
கொரோனா வைரஸ்:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் உருவானது தொடர்பாகவும், வைரஸ் தொடர்பான தகவல்களை மறைத்தது தொடர்பாகவும் சீனா மீது உலக நாடுகள் பெரும் கோபத்தில் உள்ளன. ஆகையால், இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்கவும் உலக நாடுகளின் பார்வையை கொரோனாவில் இருந்து திசைத்திருப்பவும் இந்தியாவை சீண்டி போர் என்ற கருத்துக்களை உலக அளவில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம்:
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே தற்போது மிகவும் இணக்கமான சூழல் தற்போது நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தென்சீன கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆகையால், அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த தென்சீன கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறது. இவை சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாங்க ரீதியிலான தோல்விகள்:
நரேந்திர மோடி பிரதமரான பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டும், பல்வேறு நாட்டுத்தலைவர்களு இந்தியா வர அழைப்பு விடுத்தும் அந்நாடுடனான உறவுகளை ராஜாங்க ரீதியில் வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜிங் பிங்கும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது.
உளவுத்துறையின் பங்கு:
லடாக் எல்லையில் சீனா கட்டமைப்புகளை உருவாக்குவது தொடர்பான தகவல்கள் உளவுத்துறை மூலமாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவ்வாறுன்தகவல்கள் கொடுக்கப்பட்ட பட்சத்தில் மத்திய அரசு சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க தவறியதே இந்த மோதலுக்கு காரணங்களாக இருக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.