நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறப்பாகப் புகார் வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.6 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனாவால் நாடு முழுதும் லட்ச கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நாட்டில் தற்போது உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த நிலைமையைப் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் 12 மாநிலங்களில் அடுத்த 15 நாட்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போதுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியை அதிகரிக்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்படப் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளார்.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே