சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ரூ.50

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை (பிளாட்பார்ம்)டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் கட்டணமாக ரூ.50 நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் பயணிகளிடமிருந்து வரும் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட்களை வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்துள்ளது.

கரோனா தொற்று அச்சுறுத்தல்காரணமாக கடந்த ஆண்டு மார்ச்23-ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது, சென்னை ரயில்வே கோட்டத்தில் நேற்று முதல் 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க அனு மதித்துள்ளது.

டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கையாகும். இது பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கரோனாவைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை. இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே