அசுரன்’ படத்தை இயக்கியதற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’விடுதலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’விடுதலை’ என்ற டைட்டிலில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘துணைவன்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தையும், விஜய் படத்தையும் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.