வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ சர்ச்சை – பின்னணி என்ன?!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலரது ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம். இன்று மீண்டும் திருப்பியளித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்கள் வரை தங்களுக்கான தனிப்பட்ட கணக்குகளையும், அலுவலகம் சார்ந்த கணக்குகளையும் வைத்துள்ளனர். இதில் இவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ட்விட்டர் நிர்வாகத்திடமிருந்து ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்வர்.

அவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத்தின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கி மீண்டும் இன்று வழங்கியுள்ளது. இதேபோல், ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரின் ப்ளூ டிக்குகளை நீக்கியது பேசுபொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்களான கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் அனிருத் தேஷ்பாண்டே உள்ளிட்டோரின் ப்ளூ டிக்கை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கடந்த மார்ச் மாதமே ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது. அதன்பிறகும் எந்தவொரு விளக்கமும் ட்விட்டர் அளிக்கவில்லை”.

இதேபோல்தான் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக்கை நீக்கியது. இது தொடர்பாக துணை ஜனாதிபதி தரப்பிலிருந்து ட்விட்டர் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்திய பின் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் அவருக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டது. அவரது கணக்கு வெகு நாட்களாக செயல்பாடாமல் இருந்ததே ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு காரணமாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி கடைசிப் பதிவை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் பகவத்

அதைத்தொடர்ந்து, மோகன் பகவத்திற்கும் ப்ளூ டிக்கை இன்று மாலை ட்விட்டர் நிர்வாகம் திருப்பியளித்தது. மோகன் பகவத் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ட்விட்டரில் இணைந்துள்ளார். சுமார் 2 லட்சம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் அவர் இதுவரை ஒரு பதிவையும் தனது கணக்கில் பதிவிடாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதேபோல் பல வருடங்களாக செயல்பாடின்றி இருந்து வரும் பிற சில கணக்குகளை கண்டுகொள்ளமல் வேண்டுமென்றே ட்விட்டர் நிர்வாகம் எங்களை குறிவைக்கின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ள்னர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே