கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி..!!

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வரும் மே மாதத்தில் தொற்று உச்சத்தை தொடவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது.

இதனால், சென்னையில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சென்னையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகின்றனர்.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20 மற்றும் அதற்கும் குறைவான விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய நிலவரப்படி முட்டைகோஸ் கிலோ ரூ.6, முள்ளங்கி ரூ.8, பீட்ரூட் ரூ.11, தக்காளி, உருளைக்கிழங்கு தலா ரூ.12, அவரை, முருங்கை, வெங்காயம், புடலங்காய் தலா ரூ.15, கேரட் ரூ.18, கத்தரி, வெண்டை, பாகற்காய் தலா ரூ.20, பச்சை மிளகாய் ரூ.30, சாம்பார் வெங்காயம் ரூ.40, பீன்ஸ் ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது,”ஊரடங்கு அச்சத்தால் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். சுப நிகழ்ச்சிகளும் குறைந்துவிட்டன.

ஆனால், காய்கறி வரத்து வழக்கம்போலவே உள்ளது. விற்பனையைவிட, வரத்து அதிகமாக உள்ளதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது” என்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே