உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1,677 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் ஊரடங்கு நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தின் தொழிற்கல்வித்துறை அமைச்சராகவும், கேபினட்டில் அங்கம் வகித்த கமல் ராணி வருண், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமித் ஷா தனக்குக் கரோனா இருப்பதாகத் தகவல் வெளியிட்ட சிறிது நேரத்தில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கும் தனக்குக் கரோனா தொற்று உறுதியான செய்தியை ட்விட்டரில் பதிவிட்டார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘கரோனா வைரஸ் தொடர்பாக லேசான அறிகுறிகள் எனக்கு இருந்தன.

இதையடுத்து, நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கடந்த சில நாட்களாக என்னுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்கள் அறிவுரைப்படி, நான் எனது வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

உத்தரப் பிரதேச மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள், மாநில அரசு அறிவுறுத்திய வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி நடங்கள்’ என ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே