பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் அண்மையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ராஜினாமா செய்ததால், நேற்று காலை 11 மணிக்கு சண்டிகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்பொழுது பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் பஞ்சாபின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 59 வயதுள்ள சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் பஞ்சாபின் கரார் நகராட்சி தலைவராக இரு முறை பதவி வகித்துள்ளார்.