மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளதோடு அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்து வந்தது.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான புதிய கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதியும், முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 8ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு (2019) முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை மாதம் 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளின் தேதிகளும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.