ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

கரோனா தொற்றுப் பரவலால், ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. முன்னதாகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், ஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டில் கோவிட் பெருந்தொற்று நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய சிஐஎஸ்சிஇ முடிவு செய்துள்ளது. முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பும், நலனுமே முக்கியம்.

10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில், நியாயமான மற்றும் நடுநிலையான அளவுகோல் பயன்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறோம். மதிப்பெண் மதிப்பீட்டு முறையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்” என்று ஜெர்ரி அரதூண் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிஐஎஸ்சிஇ வாரியத்தில் 10-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. 12-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டும் கரோனா பரவலால் சிஐஎஸ்சிஇ வாரியம், பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே