கரோனா தொற்றால் டிவி கேமராமேன் வேல்முருகன் உயிரிழப்பு : தலைவர்கள் இரங்கல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இன்று காலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஊடகங்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் முன் களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர், அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களைக் கரோனா தாக்கும் என அறிந்தும் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் மேற்சொன்ன அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் அல்லாமல் அவரது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. 

மைலாப்பூரில் குடியிருக்கும் காவல் துறை எஸ்.பி. ஒருவருக்கு தொற்று ஏற்பட அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டது. இதில் அவரது மனைவி உயிரிழந்தார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமைச் செவிலியர், மருத்துவர்கள், காவல் ஆய்வாளர் பாலமுரளி என கரோனாவின் கோரக்கரங்களுக்குப் பலியாகியுள்ள நிலையில், இன்று ஊடகத்துறையிலும் மரணம் நிகழ்ந்துள்ளது.

ஊடகத்துறையில் குறிப்பாக காட்சி ஊடகத்துறையில் பல இளம் செய்தியாளர்கள், அலுவலகத்தில் பணியாற்றுவோர், ஒளிப்பதிவாளர்கள், ஓட்டுநர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்புவது தொடர்கதையாக உள்ள நிலையில் முதல் சோக சம்பவமாக ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் (41) கரோனா தொற்றுக்கு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தமிழன் தொலைக்காட்சியில் பணியைத் தொடங்கிய வேல்முருகன் பின்னர் மக்கள் தொலைக்காட்சியில், ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.

செய்தி, நிகழ்ச்சி, கோப்பியம் என சகல பகுதிகளிலும் தனது பங்கினைச் செலுத்தியவர் வேல்முருகன்.

திருமணமான இவர் மனைவி 12 வயது மகனுடன் திருமுல்லைவாயிலில் வசித்து வந்தார். கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார்.

கரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் பணி நிமித்தமாக தவிர்க்க இயலாத நிலையில் வேல்முருகனும் பணியாற்றி வந்துள்ளார்.

இதில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன் காய்ச்சல் ஏற்பட கரோனா தொற்று பரிசோதனை செய்த போது அவருக்குத் தொற்று உறுதியானது.

பின்னர் காய்ச்சல் அதிகரிக்கவே ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந்த ஊடகத்தினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலின், ஓபிஎஸ், வைகோ, ராமதாஸ், டிடிவி தினகரன், கே.எஸ்.அழகிரி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

கோவிட்-19 பாதிப்பு காரணமாகக் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கடும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் அளிக்கிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போல ஊடகத்துறையினரும் இந்தக் கரோனா காலத்தில் மக்கள் நலனுக்காக முன்கள வீரர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அத்தகைய நிலையில், தமிழ் ஊடகத்துறையில் முதல் உயிரிழப்பு என்பது தாங்கவியலாத துயரத்தை அளிக்கிறது.

துணை முதல்வர் ஓபிஎஸ்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

#COVID19 தொற்று காரணமாக ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனும் செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

மூத்த பத்திரிகையாளர் வேல்முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று காலை # கோவிட் தொற்றுக்கு ஆளானவர். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அனைத்து ஊடகத்தினரும் வேலை மற்றும் சவால்களை மீறி தங்களை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் கரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

கரோனா தொற்று காலத்திலும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் வேல்முருகன் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வேல்முருகன் 20 ஆண்டுகள் ஊடகத் துறையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்பதை வேல்முருகனுடைய இழப்பு நமக்கு உணர்த்துகிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக தலைவர், திருமாவளவன்:

ராஜ் தொலைக்காட்சியின் செய்தியாளர் வேல்முருகன் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஊடகத்தளத்தில் ஒவ்வொருவரும் உயிரைப் பணயம் வைத்தே ஒங்வொரு நாளும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு ஓடியாடி செய்திகளைத் திரட்டிய, ஊடகப்பணிகளை ஆற்றிய வேல்முருகன் இந்தக் கொடியத் தொற்றுக்கு ஆளாகிப் பலியாக நேர்ந்தது பெருந்துயரத்தை அளிக்கிறது.

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய உதவியும், அவரது மனைவி ஒப்பந்த செவிலியராக உள்ள நிலையில் அவரது பணியை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு ஊடகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே