விஜயகாந்தை சந்தித்தப்பின் டிடிவி தினகரன் பேட்டி..!!

தமிழக மக்களுக்கு நன்மை செய்யவே அமமுக தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் தீய சக்தியையும் துரோக கூட்டணியையும் வீழ்த்துவதே எங்களின் நோக்கம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சுமுகமான பேச்சு வார்த்தை எட்டப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்த அறிவிப்பை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தேமுதிக அதிமுக கூட்டணியில் வெளியேறியதும் தேமுதிக வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. 

தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அக்கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக தலைவரும் பொதுசெயலாளருமான விஜயகாந்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த தினகரன் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பூங்கொத்துக்களை கொடுத்த டிடிவி தினகரன் சில நிமிடங்கள் விஜயகாந்த் உடன் ஆலோசனை நடத்தினார்.

விஜயகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மக்களுக்கு நன்மை செய்யவே அமமுக தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறினார்.

சட்டசபைத் தேர்தலில் தீய சக்தியையும் துரோக கூட்டணியையும் வீழ்த்துவதே எங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

அமமுக தேமுதிக கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று கூறிய டிடிவி தினகரன், விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதாவை வெற்றி பெற வைப்போம் என்று கூறினார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடாமல் கோவில்பட்டியில் போட்டியிடுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தோல்வி பயம் காரணமாக தொகுதி மாறி விட்டீர்களா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன், தொகுதி மாறியதற்கு பயம் காரணமில்லை என்று கூறினார். ஏற்கனவே கட்டாயத்தின் பேரில்தான் ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறினார்.

உடல்நல பாதிப்பு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே