தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது – மருத்துவர்கள் விளக்கம்

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

புதுச்சேரி ஜிப்மர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல  மருத்துவமனை தனியாக இயங்கி வருகிறது.

இங்கு மாதத்திற்கு 1500 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எடை குறைவாகவும் குறைந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது.

இந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காத சூழ்நிலையில் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2016ம் ஆண்டு ஜிப்மரில் அமுதம் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளில் 4000 முறை தாய்ப்பால் தானம் இங்கு செய்யப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 1 முதல் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தாய்ப்பால் தானமாக இங்கே கிடைக்கிறது.

இதன் மூலம் மாதத்திற்கு 100 குழந்தைகளாவது பயன்பெறுவதாக மருத்துவர் சிந்து தெரிவிக்கிறார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கட்டாயம் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நோயால்  நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று வராது.

தாய்ப்பால் மூலம் கொரோனா நோய் பரவாது. கிருமியை எதிர்க்கும் சக்தி தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும்.

கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும் சேயையும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை.

பால் கொடுப்பதற்கு முன்பு கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்மார்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மற்றபடி வழக்கம் போல் தாய்ப்பால் தரலாம் என பச்சிளங் குழந்தைகள் நல மருத்துவர் ஆதிசிவம் கூறியுள்ளார்.

அமுதம் தாய்ப்பால் வங்கிகள் மூலம் தாயை இழந்த குழந்தைகளும் தாயிடமிருந்து தற்காலிக பால் கிடைக்காத குழந்தைகளும் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே