செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் செல்வத்துக்கு திருமணம் நடந்தது.
இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுவார். அதன்படி கடந்த 13-ம் தேதி செல்வம், அந்தப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
சாலை ஓரத்தில் செல்வம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
விபத்தில் சிக்கிய செல்வம்
இதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் இன்று உயிரிழந்தார்.
அதன்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகேந்திராசிட்டி பகுதியில் அதிகாலை நேரத்தில் தன் மனைவிக்கு ஒருவர் கார் ஓட்ட கற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் செல்வம் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோதுகூட அந்தக் கார் அவர் மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த விபத்து சிசிடிவி தற்போது வெளியாகியிருக்கிறது.