திரைப்பட இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை.
அப்படி ஆராதிக்கப்படுபவர்களில் ஒருவர் ஸ்வர்ணலதா. அவரது நினைவு தினமான இன்று அவரைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக தெரிந்துகொள்வோம்.
தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் – ஆலாபனை அரசி – அனைத்துவிதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி! தாங்கிக்கொள்ள முடியாத சோகம், வெளிப்படுத்த முடியாத காதல் என பல விசயங்களுக்கு பிரபல இசை அமைப்பாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு பலரையும் ஆறுதல்படுத்த, உற்சாகப்படுத்த வருபவர்களில் ஸ்வர்ணலதாவுக்கு தனி இடமுண்டு.
சத்ரியன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்ற பாடல் மூலம் நம் மனதோடு பேசியவர்தான் ஸ்வர்ணலதா. இத்தகைய பாடல்களை அவர் பாடி முடிக்கும்போது அனைவரது மனமும் எங்கோ பறந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வுகள் தோன்றி அடங்கும்.
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் வரும் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி’ என்ற பாடலில் ‘அன்பே ஓடி வா… அன்பால் கூடவா… ஓ.. பைங்கிளி’ என்ற வரிகளைப் பாடும்போது நம் உள்ளத்தை நெகிழச் செய்திருப்பார் ஸ்வர்ணலதா.
ஊரில் நடக்கும் திருவிழாக்களை கண்முன்னே கொண்டு வந்ததில் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு பெரும் பங்கு உள்ளது. மின்மினியுடன் சேர்ந்து அரண்மனைக் கிளி படத்தில் ஸ்வர்ணலதா தந்த கானம் கேட்கக் கேட்க திகட்டாதது. அரண்மனைக்கிளி படத்தில் வரும் ‘அம்மன் கோவில் கும்பம் இங்கே’ பாடலை தமிழ்ச் சமூகம் அவ்வளவு எளிதில் மறந்து விடுமா என்ன?!
ஏஆர் ரஹ்மானில் இசையில் காதலன் படத்தில் வரும் முக்காலா முக்காபுலா பாடலில் ஸ்வர்ணலதாவின் ஸ்டையிலிஷான குரல் நம்மை சொர்க்கத்தின் வாசலுக்கு கொண்டு சென்றுவிடும். ஜூராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடிவருது என்ற வரிகளில் நம்மை தன் குரலால் வீழ்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா.
அலைபாயுதே படத்தில் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான். இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்’ பாடலில் அவரது குரல் வந்து சேர சாதாரண சூழலே அதிசயச் சூழலாக மாறிவிடும். காதலனை பிரிந்த காதலியின் வலியை தனது குரல் மூலம் கடத்த முடியுமா? நம் உள்ளத்தை கலங்கடிக்க முடியுமா? ஆம் என்று கூறி அதை நிகழ்த்தி காட்டியிருப்பார் ஸ்வர்ணலதா.
‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ எனப் பாடிய ஸ்வர்ணலதா பல மொழிகளில் சுமார் 7 ஆயிரத்து 500 கானங்களை திரை ரசிகர்களுக்கு தந்துள்ளார். ராக்கம்மா கையத்தட்டு, மாலையில் யாரோ மனதோடு பேச, ஆட்டமா தேரோட்டமா, போவோமா ஊர்கோலம், குயில் பாட்டு வந்ததென்ன இளமானே, போறாளே பொன்னுத்தாயி போன்ற பாடல்களால் இன்றும் நம் மனதில் நிலைத்துவிட்டார்.