முருகக் கடவுள் குறித்து அவதூறாக பேசியவர்கள் தேச விரோதிகள்..! – முருகன், பாஜக மாநில தலைவர்

முருகக் கடவுள் குறித்து அவதூறாக பேசியவர்கள் தேச விரோதிகள். குள்ளநரி கூட்டம் யார் என்பதை ஆர்.எஸ். பாரதிதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக அரசியல் ரீதியாக வெடித்துள்ளது.

இந்து அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அரசியல் சர்ச்சையாக மாறி வருகிறது.

இன்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ”கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு கொடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

கந்த சஷ்டி விவகாரத்தில் முருகனை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுதான் எங்களது நிலைப்பாடும். ஆனால், இதை திமுகவுக்கு எதிராக திருப்புவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

முருகனுக்கு எதிராக பேசி இருக்கும் கறுப்பர் கூட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவரது பெயரில் திட்டமிட்டு போலியாக அவதூறு செய்தி பரப்பப்படுகிறது.

பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்க இருக்கிறோம். காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

திமுகவில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் இந்துக் கோயில்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

அனைத்து மதத் தலைவர்களும் திமுகவுடன் நெருக்கமாக இருந்தனர்.

திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அர்பத்தனமாக பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.

தமிழகத்துக்குள் குள்ளநரி கூட்டம் நுழைய பார்க்கிறது. இதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல். முருகன் இதை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை கண்டித்து பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், ”தமிழ் கடவுள் முருகனை இழிவுப்படுத்திய கறுப்பர் கூட்டம் சேனலை தடை செய்ய வேண்டும்.

இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேந்திர நடராஜன் உள்ளிட்டவர்களை தேச துரோக வழக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே