நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால் தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்குக் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து சூர்யாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”தலைமை நீதிபதி அவர்களுக்கு,
இன்று காலை ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி அறிந்தோம், அதில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதியுள்ள கடிதம் குறித்த செய்தியை அறிந்தோம்.
நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரது அறிக்கையில், ‘கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் இக்கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
அவரது கருத்து தவறாகச் சித்தரிப்பது மட்டுமல்ல, நீதித்துறை குறித்த தவறான கருத்தை உருவாக்குவதாகவும் உள்ளது எனச் சுட்டிக்காட்டி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதை அறிந்தோம்.
சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம்.
4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார்.
அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்’.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடிதம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் பெயரில் எழுதப்பட்டு அடியில் ஓய்வு நீதிபதி சந்துரு கையெழுத்திட்டுள்ளார்.