கொரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை, 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘கரோனா’ வைரஸ் ஒரு நுண் கிருமி, புதிய வகை வைரஸ். கண் நோய் போல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

ஆனால், சாதாரண சோப்புத் தண்ணீரில் கூட இந்த வைரஸ் அழிந்துவிடுகிறது.

அதனால், இந்த தொற்று நோயைப் பார்த்து அச்சப்படவோ, தேவையற்ற பீதியடையவோ வேண்டாம்.

முகக்கவசம் அணியாமல் செல்வோர் மட்டுமே அச்சப்பட வேண்டும்.

நுரையீரல் பாதிப்பிற்கு முன் வந்தால் மிக விரைவாகவே இந்த நோயில் இருந்து குணமடையலாம். இன்னும் உயிரிழப்பை தடுக்கலாம்.

பெருமைக்காக சொல்லவில்லை. நம்பிக்கையூட்டுவதற்காக சொல்கிறோம். தற்போது வரை 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு இந்த தொற்று நோய்க்கு 1.5 சதவீதத்திற்கு கீழேதான் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதலின் கீழ் 12 விதமான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.

உயிரிழப்பை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. வெண்டிலேட்டர்களை அதிகரியுங்கள், இந்த நோய் சிகிச்சைக்கு அதுதான் முக்கியம் என்று உலக சுகாதாரநிறுவனமே சொன்னது.

ஆனால், மதுரையில் தற்போது ஒரு நோயாளிக்குக் கூட வெண்டிலேட்டர் பயன்படுத்தப்படவில்லை.

இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மருந்துகளை மதுரைக்கு கூடுதலாக வழங்கியுள்ளோம். இந்த நோயை ஒழிக்க முககவசம், சமூக விலகல் மட்டுமே முக்கியம்.

முகக்கவசங்களை கழட்டி கைகளில் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவர்களால் அவர்களுக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று நோய் பரவி பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தவிர மற்ற நோயாளிகளில் நடக்கும் அனைத்து இறப்புகளையும் கணக்கீடு செய்து அவற்றையும் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே அதிகமாக தமிழகத்தில் 35 ஆயிரம் பரிசோதனைகள் தினமும் செய்யப்படுகிறது. இன்னும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே