ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; 3 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம்: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, கோவைமாவட்டங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை டவர்-3 கட்டிடத்தின் 4-வது மாடியில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்விஇயக்குநர் நாராயண பாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன்,மருத்துவர்கள் கோபாலகிருஷ் ணன், ஜாகிர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா தொற்றின் பாதிப்புஅதிகமாக உள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள 46 மாவட்டங்கள் பட்டியலில், தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது வரை, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 சதவீதம் பாதிப்பு உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரேமருத்துவமனைக்கு செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நோய் கட்டுப்பாட்டுபணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பை பொறுத்தவரை, குடிசை பகுதிகளில் குறைவாகவும், கூட்டுக் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாகவும் பரவி வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

45 வயதுக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் உயிரிழப்பு சதவீதம் 90 ஆகவும், 18 முதல் 45 வயது வரையிலானவர்களில் இது 9 சதவீதமாகவும் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஆண்டு எந்த மருந்தும் இல்லாததால், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழலில், தொற்றுபாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், அத்தியாவசிய பணிகள் இல்லாதவற்றுக்கு படிப்படியாக கட்டுப்பாடுவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே