சிறுவன் சுஜித்தின் அழுகுரல் தன்னுள் இன்னும் ஒலிப்பதாக அமைச்சர் உருக்கம்

தான் மட்டுமின்றி இந்த உலகமே தனது பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் தன்னுள் இன்னும் ஒலிப்பதாகவும், மனம் வலிப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

எப்படியும் வந்து விடுவாய் என்று தான் ஊன் இன்றி, உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர்.

இப்படி புலம்பி அழ விடுவாய் என்று எண்ண வில்லை எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ண வில்லை எனவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்ததாகவும், மார்ச்சுவரியில் பார்த்ததால் இதயம் கனத்துக் கிடக்கிறது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

85 அடி ஆழத்தில் தான் கேட்ட சிறுவனின் மூச்சு சத்தம் தான் தன்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மனதை தேற்றிக் கொள்கிறேன் ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறுவன் சுஜித்தை குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே