ஓ.பி.எஸ் பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனாகியிருப்பார் (முதலமைச்சராக இருப்பார்) என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவானைக்காவலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ஆர்.மனோகரன் தாயார் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசு. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரவில்லை.

அதனால் தான் இப்படி விளம்பரம் செய்கிறார்கள் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் விளம்பரம் குறித்த கேள்விக்கு, பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் ஒ.பன்னீர்செல்வம். பரதனாக இருந்திருந்தால் மீண்டும் பரதனாகியிருப்பார்.

அவர் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால் மீண்டும் அவர் பிப்ரவரியில் பரதனாகியிருப்பார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனையில் செயல்பட்டார். ஓ.பி.எஸ் பரதனாக திரும்ப வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டதற்கு, வந்தால் பார்க்கலாம் என்றார்.

ஓபிஎஸ் மீது சாஃப்ட் கார்னரா? என்ற கேள்விக்கு அவர் மீது மட்டுமல்ல. எங்களை திட்டுவோர் உட்பட அனைவர் மீதும் சாஃப்ட் கார்னர் தான் என்றார்.

வரும் தேர்தலில் அமமுக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவை மீட்கும் என்றார்.

முதலமைச்சர் டிடிவி தினகரனா? என்ற கேள்விக்கு அமமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றார். மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும் நிறைய தீமைகள் உள்ளன.அதே போல அ.தி.மு.க அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை செய்திருக்கலாம்.

அது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்கள்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 15 விழுக்காடு வாக்குகளை பெற்றோம்.வரும் சட்ட மன்ற தேர்தலில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை போல அமமுக நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்.

ஸ்லீப்பெர் செல் என்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல,அ.தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் தான் ஸ்லீப்பெர் செல்கள்.

சசிகலாவை வரவேற்ற போது அது மக்கள் பார்த்தார்கள்.

உதாரணமாக சசிகலாவை காரில் அழைத்து வந்த சம்மங்கி,தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் தான் ஸ்லீபெர் செல்கள். பா.ஜ.கவை தேவையான போது தான் எதிர்ப்போம். இப்போது நானா கைகோர்த்து நின்றேன்? என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே