11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் – DPI

மாணவர்களின்‌ நலன்‌ கருதி தமிழகத்தில்‌ மேல்நிலைக்‌ கல்வியில்‌ புதிய பாடத்திட்டங்கள்‌ முறையினை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேல்நிலை கல்வியில் மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறையுமென்பதால், தொடர்ந்து 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை செயல்படுத்தவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில், 2020 – 21 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் சுருங்க நேரிடும் என்பதால், 4 பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து செய்வதுடன், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும், அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே