கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்று 6 கோடியை கடந்தது.

நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமடைந்து வருகிறது. கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 6,02,69,782 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவர்களில் 2,77,24,920 பயனாளிகள் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர். 71-ம் நாளான நேற்று 21,54,170 தடுப்பூசிகள் போடப்பட்டன.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், மற்றும் தமிழ்நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இவர்களில் 81.46 சதவீதம் மேற்கண்ட 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 35,726 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், செயலாளர்கள், அதிக பாதிப்பு உள்ள 46 மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய உயர் நிலை குழுவினரிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். புதிய கரோனா அலையை கட்டுப்படுத்த அவர் 5 அடுக்கு ஆலோசனையை வழங்கினார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மொத்த கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை 24 கோடியை கடந்தது. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 4,86,310-ஆக உள்ளது.

இந்தியாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,23,762-ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 94.59 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 28,739 பேர் குணமடைந்துள்ளனர். 312 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே