ஐபிஎல் தொடரிலும் இனி ஓப்பனிங் தான் – ரோகித் சர்மாவிடம் ஆசையை வெளிப்படுத்திய கோலி!

ரோகித் சர்மா இதே போல 15 ஓவர்களுக்கு ஆடினால் எதிரணி வீரர்களுக்கு ஆபத்து தான். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை மேலும் நகர்த்திச் சென்றனர் என்றார் கோலி.

இங்கிலாந்துடனான கடைசி டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி, இனி ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் செய்ய ஆசைப்படுவதாக ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்தார்.

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தை 188 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.

பொதுவாக ஒன் டவுனில் இறங்கும் விராட் கோலி, நேற்று துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் செய்தார். இருவரும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வலிமையான அடித்தளம் ஏற்படுத்தித் தந்தனர். 9 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் எடுத்தனர். 52 பந்துகளுக்கு 80 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார் விராட் கோலி.

நேற்றிரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொடர் நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், ரோகித் சர்மாவை பார்த்து “ஆம். இனி ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் செய்ய போகிறோம். நான் கடந்த காலங்களில் பல நிலைகளில் ஆடியிருக்கிறேன். ஆனால் தற்போது வலுவான மிடில் ஆர்டர் அமைந்துள்ளது. இரண்டு சிறந்த பிளேயர்களுக்கு அதிக பந்துகள் கிடைப்பதற்காகத் தான். நான் ரோகித்துடன் டாப் ஆர்டரில் இறங்க விரும்புகிறேன். நாங்கள் முதல் வரிசையில் இறங்கும் போது பின்வரிசை வீரர்களுக்கும் நம்பிக்கை கிடைக்கும்.

ரோகித் சர்மா இதே போல 15 ஓவர்களுக்கு ஆடினால் எதிரணி வீரர்களுக்கு ஆபத்து தான். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை மேலும் நகர்த்திச் சென்றனர். நான் அனைத்து பார்னர்ஷிப்புகளாலும் மகிழ்ந்தேன். ஏறக்குறைய எங்களில் டி20 அணி இதுவாகத்தான் இருக்கும். எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடரிலும் ஓப்பனிங் செய்ய விரும்புகிறேன்” இவ்வாறு கோலி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே