ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1, 2020 நிலவரப்படி தமிழகத்திற்கான ரூ.12,250 கோடி நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது.
அப்போது, 2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார்.
இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.97,000 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை 0.5% உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என 2வது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், எதாவது ஒரு வாய்ப்பை தேர்தெடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இழப்பீடு தொகையை ஈடுகட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மத்திய, மாநில நிதித்துறை செயலர்கள் கூட்டம் செப்., 1ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.