ஊரடங்கு நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ தயார் நிலையில் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் சாமானியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் திட்டம் சரியானதுதான் எனவும் அதை நடைமுறைப்படுத்தும் வகைதான் சரியல்ல எனவும் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அரைகிலோ சர்க்கரை, அரைகிலோ பருப்பு, சொற்ப காய்கறிகள் கொடுத்துள்ளனர்.
இதை வைத்து ஒரு மாதத்திற்கு என் குடும்பத்தை எந்த கஷ்டமும் இல்லாமல் நடத்தலாம் என்று யார் சொன்னது. சத்தியமாக தமிழக அரசின் திட்டம் சரியானதே.
ஆனால் முறையாக நடைமுறைபடுத்துகிறார்களா என்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
எங்களுக்கு நிவாரண உதவி தரவில்லை என்றால் கூட பரவாயில்லை.
ஆனால் தந்த மாதிரி எங்களை அசிங்கப்படுத்துற மாதிரி கணக்கு காண்பிக்காதீர்கள்.
டிவியில் எங்களுக்கு உதவி செய்வது போன்று காண்பித்து ஏமாற்றாதீர்கள். கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ அரசு தயார் நிலையில் இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.
உதவி தேவைப்பட்டால் 1800 425 0111 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுரை இளைஞருக்கு தேவையான நிவாரண உதவியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் அதை வாங்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.