ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னைப் பணி நீக்கம் செய்யும் நோக்கில் அமைத்த விசாரணை ஆணையம் செல்லத் தக்கதல்ல – சூரப்பா வாதம்..!!

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டதால், தன்னை பணி நீக்கம் செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் கூடாது என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் தன்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என இடைக்கால உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா, கடந்த 11ஆம் தேதியோடு ஓய்வுபெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்த நிலையில், துணைவேந்தரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால், அவர் கடந்த 11ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

துணைவேந்தராக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை அவர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், குடியிருப்பை உடனடியாக காலி செய்ய முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்க உள்ள நிலையில், குடியிருப்பை காலி செய்ய இரண்டு மாதமாவது அவகாசம் தேவை. இதற்கு முன் துணைவேந்தராக இருந்தவர்கள் அரசு ஒதுக்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்யவில்லை. பிற முன்னாள் துணைவேந்தர்களுக்குத் தரப்பட்ட சலுகை எனக்கும் தரப்பட வேண்டும் என சூரப்பா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே