இந்தியாவில் தமிழகத்தில் தான் நாளொன்றுக்கு 68 அயிரம் கரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன எனவும் இயல்பு நிலைக்குத் திரும்ப அரசு கடுமையாகப் போராடி வருகிறது எனவும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கரோனா நோய் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.21) நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
“நாமக்கல் மாவட்டம் கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டும், பரிசோதனை செய்தும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்குத் திரும்ப அரசு கடுமையாகப் போராடி வருகிறது. கரோனா தடுப்புப் பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேவேளையில், நோயாளிகளுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் நாளொன்றுக்கு 68 அயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
லாரித் தொழில், முட்டை உற்பத்தி, ரிக், சேகோ உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. அதுபோல் கல்வியில் முதன்மையாக நாமக்கல் மாவட்டம் திகழ்கிறது.
தொழில் கல்வியில் உருவாக்குவதிலும் முதன்மை மாவட்டமாக நாமக்கல் உள்ளது.
லாரி தொழிலில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநில, மாவட்டங்களுக்குத் தொழிலாளர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் அரசு நிறைவேற்றி வருகிறது.
லாரி தொழில் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைக்காக நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராசிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு – சங்ககிரி – ஓமலூர் இரு வழி சாலை நான்கு வழியாக மாற்றி அமைக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் குழந்தைகள் உயர் கல்வி பெற சேந்தமங்கலத்தில் அரசு கலை கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி. பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.