சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலராக பணியாற்றிய, பத்மநாபன் என்பவரின் வீட்டின் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த வீட்டை சுற்றி இருந்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய பலத்த காயமடைந்த 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டில் வணிக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற வணிக சிலிண்டர்களை வீடுகளில் வைத்து பயன்படுத்துவதை கண்காணிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.