பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி..!!

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் பலர் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் பல ஆசிரியர்கள் கைதாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது. மே 24ஆம் தேதி அவரைக் கைதுசெய்த போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூன் 8ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனிடையே அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 1ஆம் தேதி மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜகோபாலனை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மூன்று நாட்கள் முடிந்து நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மத்தியில் தனக்கு ஜாமீன் கோரி ராஜகோபாலன் சார்பில் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து நீதிபதி ஃபரூக், ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே