ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வித் துறை.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கி உள்ளன.
ஆனால், அரசு பள்ளிகள் எப்போது திறக்கும் என்றும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ஆன்லைன் வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகளும்பதியப்பட்டு உள்ளன.
இணைய வழி வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லை கல்விக்கான நெறிமுறைகள் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி,
எந்த ஒரு மாணவரும் இணையவழி கலந்து கொள்வதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.
தொலைக்காட்சிகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி,ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.
ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும்.
எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது.
1-8 வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம்.
ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும்.
9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்தான் இணையவழி வகுப்பு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் 6 வகுப்புகளை மட்டுமே எடுக்க வேண்டும்.
அதாவது கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றெல்லாம் எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது
மேலும் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒரே நேரத்தில் இருவரும் கலந்துகொள்வதற்கான சூழல் ஏற்படாத நிலையில் மூத்த குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் இணையவழி வகுப்பில் கலந்து கொள்ள திட்டமிடல் இருக்க வேண்டும்.
மேலும் இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ளும் போது கூடவே ஒரு பெரியவர் அவர்களுடன் இருக்க வேண்டும்.
ஒரு வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் வகையில் இருக்க வேண்டும்.
இந்த நெறிமுறை அனைத்து பள்ளிக்கும் பொருந்தக்கூடியது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.