பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கிடையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் மத்திய அரசுமேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவப் படிப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்தும் முன் உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இதனால், மருத்துவப் படிப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிலேயே அமலாக வாய்ப்புள்ளது.