#BREAKING : சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைதாகி, நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக நடைபெற்றது.

விசாரணையில் நீதிபதிகள், உடற்கூறு அறிக்கையின்படி, ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியதோடு,

இந்த வழக்கில் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த வழக்கை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதன்படி , சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை, சிபிசிஐடி இவ்வழக்கை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நெல்லை சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், அவர் தற்போது கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருப்பதால் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் , நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி இன்றே வழக்கின் விசாரணையைத் தொடங்க வேண்டும்.

டி.ஜி.பி அனுமதிக்காக காத்திருக்க தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே