விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை பொது இடத்தில் வைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைவினை காகிதக் கூல் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், விநாயகர் சதுர்த்தியின் போது தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சதுர்த்தியின் போது எப்படியும் சிலைகளை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உருவாக்கியுள்ளோம். ஆனால் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில்,தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் இந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.