சூப்பர் சூர்யகுமார்; இந்தியா ‘த்ரில்’ வெற்றி: கோலியின் நம்பிக்கையை காப்பாற்றிய ஹர்திக்: பந்துவீச்சாளர்கள் பிரமாதம்

சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம், ஹர்திக் பாண்டியா, புவனேஷின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடக்கிறது.

அறிமுகப் போட்டியில் களமிறங்கி அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கடைசி சில ஓவர்களுக்கு விராட் கோலி கேப்டன் பணி செய்யவில்லை. இதனால் ரோஹித் சர்மா களத்தில் கேப்டன் பணியை செய்து, மீண்டும் தன்னை நிரூபித்துக்காட்டினார். போட்டி முடிந்தபின் ரோஹித்துக்கு கைகொடுத்து கோலி நன்றி தெரிவித்தார்.

ஸ்கோர், விக்கெட் வீழ்ச்சி

இந்த டி20 தொடரில் டாஸ் வென்ற அணிதான் வென்றது, சேஸிங் செய்த அணிதான் வென்றது எனும் ஃபார்முலாவை இந்திய அணி நேற்று உடைத்தது. டாஸ் தோற்றாலும் வெல்வோம், எதிரணியை பந்துவீச்சால் கட்டுப்படுத்தியும் வெல்வோம் என நிரூபித்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட வேண்டியது 185 ரன்கள் எனும் கடினமான ஸ்கோர் மற்றும் நடுப்பகுதியில் எடுத்த விக்கெட்டுகள் என்பதை மறுக்க முடியாது.
இந்த 185 ரன்களையும் இங்கிலாந்து வீரர்கள் விடாமல் துரத்தி இந்திய அணியின் வெற்றிக்கு நெருக்கடி கொடுத்தனர்,

ஆனால், ஷர்துல் தாக்கூர் எடுத்த அடுத்தடுத்த இரு விக்கெட்டுகள்தான் இங்கிலாந்து அணியின் முதுகெலும்பை உடைத்தது. மோர்கன், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் டி20 தொடர் இந்தியாவின் கைகளைவிட்டு சென்றிருக்கும்.

இதன் மூலம் அகமதாபாத் ஆடுகளத்தில் 180 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் எதிரணியை சுருட்டுவதற்கு முயற்சிக்க முடியும், அழுத்தம் கொடுக்க முடியும் என்பதை 4-வது போட்டியில்தான் இந்திய அணியினர் கண்டுபிடித்துள்ளனர்.

சூப்பர் சூர்யகுமார்

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக சூர்ய குமாரின் பேட்டிங் என்பதை மறகு்க முடியாது. இந்திய அணியில் இடம் பிடிக்க நீண்ட காலமாக காத்திருந்த சூர்ய குமார் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இதுபோன்ற வீரர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும்.

சூர்ய குமார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து எந்தவிதமான அச்சமின்றி ரன் கணக்கைத் தொடங்கியது அற்புதம். அறிமுகப்போட்டியில் அசத்திய சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் அரைசதம் அடித்து 31 பந்துகளில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

நடுவரின் சொதப்பல்

களநடுவரின் சொதப்பலான முடிவு இந்த ஆட்டத்திலும் வெளிப்பட்டது. சூர்யகுமார் அடித்த ஷாட்டில் மலான் கேட்ச் பிடித்தது அவுட் இல்லை, பந்தைபிடித்து தரையில் வைத்துவிட்டார் என நன்றாகத் தெரிந்தது. ஆனால், அதற்கு அவுட் என நடுவர் சாஃப்ட் சிக்னலில் கூறிவி்ட்டு, 3-வது நடுவரைக் கேட்டது எந்த விதத்தில் நியாயம். ஒருவேளை சூர்யகுமார் அவுட்ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்திய அணியன் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாண்டியா, புவனேஷ் அருமை

கடந்த போட்டியில் கேப்டன் கோலி அளித்த பேட்டியில், “ஹர்திக் பாண்டியா பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும், அவருக்கு பந்துவீச்சில் கூடுதல் பொறுப்புக் கொடுக்கப்போகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று ஓபனிங் ஸ்பெல்லை புவனேஷ்குமாருடன் சேர்ந்து பாண்டியா தொடங்கினார். மிக அற்புதமாக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார்.

ஒவ்வொரு ஓவரிலும் வீசப்பட்ட பந்துகளும் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத விதத்தில் வித்தியாசமாக பாண்டியா வீசினார். ‘ஸ்லோபால்’, ‘நக்குல் பால்’, ‘பவுன்ஸர்’, ‘ஷாட் பால்’, ‘இன்கட்டர்’ என வகை வகையாக வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கோலி வைத்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார். இதில் 13 பந்துகள் டாட் பந்துகள், அதாவது மெய்டன்கள் என்றே கூற வேண்டும்.

அதேபோல புவனேஷ்குமார் 4 ஓவர்கள் ஒருமெய்டன் 30 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார், இவரின் கணக்கிலும் 12 டாட் பந்துகள் என்று எடுத்துக்கொண்டால், 3 மெய்டன்கள் என்று கூறலாம். ஏறக்குறைய இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்கவிடாமல் டாட் பந்துகளாக வீசியதே இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படக் காரணம்.

இருவரும் அமைத்துக் கொடுத்த வழியை ராகுல் சஹர், ஷர்துல் தாக்கூர் பயன்படுத்திக்கொண்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சை நேற்று எடுபடவில்லை, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்துத் துவைத்துவிட்டனர். அடுத்தப் போட்டியில் நிச்சயம் மீண்டுவருவார் என நம்பலாம்.

தாக்கூரின் திக்திக் கடைசி ஓவர்

இக்கட்டான நேரத்தில் தாக்கூர் எடுத்த ஸ்டோக்ஸ், மோர்கன் ஆகியோரின் இரு விக்கெட்டுகள், பேர்ஸ்டோ, மலான் ஆகியோரின் விக்கெட்டை எடுத்த சஹரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய தெம்பை அளித்து, வெற்றிக்கு வழிகாட்டின.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. தாக்கூர் சொதப்பலாக வீசியபோது ஆட்டம் கைவிட்டு சென்றுவிடுவோமோ என அஞ்சப்பட்டது. ஆர்ச்சர் அடித்த ஒரு சிக்ஸர், பவுண்டரி, அதன்பின் பதற்றத்தில் தாக்கூர் வீசிய இரு வைட் பந்துகள், ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியது.
ஆனால், 5-வது பந்தில் ஜோர்டான் லாங்ஆப் திசையில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து

ஆட்டமிழந்தபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. உண்மையில் இந்தியஅணிக்கு கடைசி ஓவரில் கிடைத்த த்ரில் வெற்றி என்றுதான் கூற முடியும். ஒரு ஓவரில் 23 ரன்களை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்திவிட முடியும், களத்தில் இருப்பவர்களும் இரு டெய்லண்டர் பேட்ஸ்மேன்கள்தான், இருப்பினும் தாக்கூர் சொதப்பலாக வீசியபின்பும் கிடைத்த வெற்றி த்ரில்லாகத்தான் இருந்தது.

விக்கெட் சரிவு

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் எனும் புதிய பேட்ஸ்மேனின் டெக்னிக், பேட்டிங் ஸ்டைல் ஏதும் தெரியாது. சூர்யகுமாரின் திடீர் தாக்குதலை எந்தப் பந்துவீச்சாளர்களும் எதிர்பார்க்கவில்லை என்பதால் எவ்வாறு வீசுவது என தெரியாமல் நிலைகுலைந்துவிட்டனர்.

185 ரன்கள் எனும் இலக்கு எனும்போது, இயல்பாகவே பதற்றமும், நெருக்கடியும் தொற்றிக் கொள்ளும் அந்த நெருக்கடி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கும் நேற்று இருந்தது. நடுப்பகுதியில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, மோர்கன் விக்கெட்டுகளை இழந்ததுதான் பின்னடைவாகும். இவர்கள் 3 பேரில் ஒருவர் நிலைத்திருந்தாலும் ஆட்டம் வேறுபக்கம் திசை திரும்பியிருக்கும்.

ரோஹித், ராகுல் ஏமாற்றம்

முதலில் பேட் செய்த இந்திய அணி, தொடக்கத்திலே ரோஹித்(12) விக்கெட்டை ஆர்ச்சரின் பந்துவீச்சில் இழந்தது. கடந்த 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் இந்தப் போட்டியில்தான் பேட்டில் பந்தை வாங்கி சில ஷாட்களை அடித்தார். அதிலும் செட்டில்ஆவதற்கு அதிகமான பந்துகளை எடுத்துக்கொண்டார்.

2-வது விக்கெட்டுக்கு வந்த சூர்யகுமார் களமிறங்கி முதல் பந்திலிருந்து அதிரடி காட்டினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து சூர்யகுமார் கணக்கைத் தொடங்கினார். பவர்ப்ளேயில் இந்திய 45 ரன்கள் சேர்த்தது. ராகுல் 14 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி ஒரு ரன்னில் ரஷித் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

கை கொடுத்த சூர்யா

4-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த் சூர்யகுமாருடன் சேர்ந்தார். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சூர்யகுமார் தனது அதிரடியான ஆட்டத்தை கைவிடவில்லை, எந்தவிதமான அச்சமும் இன்றி, அறிமுகப்போட்டியில் அசத்திய சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 31 பந்துகளில் 57 ரன்களில் சர்ச்சைக்குரிய முடிவில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

ஸ்ரேயாஸ் அய்யர் 37 ரன்கள், ரிஷப்பந்த் 30 ரன்கள் என ஓரளவுக்கு கைகொடுத்து அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினர். ஆனால், ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும் சுந்தர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தாக்கூர் 10 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி கடைசி 15 ரன்களைச்சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது பரிதாபம்.

20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது.இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நெருக்கடி
186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்கிறோம் என்ற நெருக்கடியோடு களமிறங்கி தொடக்கத்திலேயே புவனேஷ்குமார் பந்துவீச்சில் பட்லர் (9) விக்கெட்டை இழந்தது.

அடுத்துவந்த டேவிட் மலான், ராயுடன் சேர்ந்து அதிரடியாக ஆடத்தொடங்கினார். ஆனால், சுழற்பந்துவீச்சில் பலவீனமாக இருக்கும் மலான் 14 ரன்னில் சஹர் பந்துவீச்சில் போல்டாகினார். அரைசதத்தை நெருங்கிய ராய் 40 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து திருப்பம்

ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ கூட்டணி சேர்ந்து இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இருவரின் ஆட்டம் இந்திய அணி வீரர்களுக்கு சவாலாக இருந்தது. சஹர் பந்துவீச்சில் பேர்ஸ்டோ 25 ரன்னில் ஆட்டமிழந்தது முதல் திருப்பமாக அமைந்தது. இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தாக்கூர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 46 ரன்னிலும், வேகத்தில் மோர்கன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தது 2-வது திருப்பமாகும். இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

அச்சுறுத்திய ஆர்ச்சர்

ஆர்ச்சர், ஜோர்டான் கடைசி நேரத்தில் பயமுறுத்தினர். கடைசி ஓவரில் 23 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, தாக்கூர் ஓவரில் ஆர்ச்சர் அடித்த சிக்ஸர்,பவுண்டரி, இந்திய அணியின் வெற்றிக்கு அதிர்வை அளித்தது. கடைசி ஓவரில் தாக்கூர் சொதப்பலாக பந்துவீசினாலும் ஜோர்டான் (12) விக்கெட்டை வீழ்த்தி நிம்மதி அளித்தார்.

கடைசி 5 ஓவர்களையும் புவனேஷ்வர் குமார், பாண்டியா, தாக்கூர் சிறப்பாவே வீசினர். கடைசி ஓவர் மட்டுமே தாக்கூர் சொதப்பினார். ஆர்ச்சர் 18 ரன்னில் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர், பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே