‘வெற்றியோ தோல்வியோ என்னை தீர்மானிப்பதில்லை – கியாரா அத்வானி பேட்டி

2014ஆம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தவர் கியாரா அத்வானி. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறான ‘எம்.எஸ்.தோனி’, ஆந்தாலஜி திரைப்படமான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவை தவிர இவர் நடித்த ‘லக்‌ஷ்மி’ மற்றும் ‘மெஷின்’ உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் வெற்றி- தோல்வி குறித்து கியாரா அத்வானி ஐஏஎன்எஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் என்னுடைய திரைப் பயணத்தை திரும்பிப் பார்த்தால், அது ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆகட்டும் அல்லது ‘கபீர் சிங்’ ஆகட்டும், அவை நான் பிரபலமாகாத காலகட்டத்தில் எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்புகள். இறுதியில் பார்வையாளர்கள் நம் நடிப்பை விரும்பி, பாராட்டினால்தான் அடுத்த படத்துக்கான வாய்ப்புகளும் நம்மை தேடி வரும். அதனால் தான் நாங்கள் எங்கள் மீது அதிகமான அழுத்தங்களை போட்டுக் கொள்கிறோம்.

வெற்றியோ தோல்வியோ என்னை தீர்மானிப்பதில்லை. அனைத்து படங்களிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகையாக நான் இருக்க விரும்புகிறேன். நான் சாதிக்க விரும்புவது அதைத் தான்.

இவ்வாறு கியாரா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே