தஞ்சையில் வேப்பிலையுடன் வந்த மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்..!!

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திற்குக் கையில் வேப்பிலையுடன் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் ராஜகோபால் சென்றது, அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.15) நடைபெற்றது.

இதில் பங்கேற்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநிலத் தலைமைத் தகவல் ஆணையருமான ராஜகோபால் வந்தார். அப்போது இயற்கையான கிருமிநாசினி என்று கூறப்படும் வேப்பிலைக் கொத்துகளை அவர் கையில் வைத்திருந்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் அரங்கத்தின் நுழைவு வாயில் ஆகிய இடங்களிலும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டி தொங்க விடப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் அவர் வந்த வாகனத்தின் உள்ளேயும் வேப்பிலைக் கொத்துகள் இருந்ததால் அங்கு இருந்தோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் ராஜகோபால் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிச் செல்லும்போது மீண்டும் வேப்பிலையை எடுத்துக் கொண்டு காரில் சென்றார்.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அரசு தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே